இலங்கையில் பாராளுமன்றத்தின் பங்கு

பாராளுமன்றம் என்பது எந்தவொரு நாட்டிலும் ஜனநாயகத்தின் அடிப்படை தூணாக கருதப்படுகிறது. இலங்கையிலும் பாராளுமன்றம் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. பாராளுமன்றம் என்பது இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் உச்ச சட்டமியற்றும் அமைப்பாகும். அது மட்டுமே சட்டமன்ற மேலாதிக்கத்தை கொண்டுள்ளதுடன் மக்களின் சட்டவாக்க அதிகாரத்தை பயன்படுத்தும் இறுதி அதிகாரம் கொண்ட மன்றமாகும்.

இலங்கை 1948ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தாலும் 1978ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இரண்டாம் குடியரசு யாப்பின் கீழே சுயாதீனமான ஒரு சட்டத்துறையாகிய பாராளுமன்றம் உருவாக்கபட்டமை சிறப்பம்சம் ஆகும்.

இலங்கை பாராளுமன்றமானது 225 மக்கள் பிரதிநிதிகளையும் கொண்டு திகழ்கிறது. இதில் பாராளுமன்ற தேர்தல் மூலம் தெரிவு செய்யபட்ட 196 உறுப்பினர்களையும் 29 தேசியபட்டியல் ஊடாக தெரிவு செய்யபட்ட உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

இவ்வாறான பாராளுமன்றத்தின் பங்கு என்பது இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படுகிறது. நாட்டுக்குரிய சட்டங்களை உருவாக்கல், அவற்றை நடைமுறைபடுத்தல், நிதி மேலாண்மை, அரசாங்கத்தை கண்காணித்தல், ஜனநாயகத்தின் பாதுகாப்பை உறுதிபடுத்தல், மற்றும் மக்களின் விருப்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தல் என்ற அடிப்படையில் இலங்கையில் பாராளுமன்றின் பங்கு அளப்பெரியது.

இலங்கை தீவானது பல்வேறு இன , மத, மொழி, மற்றும் கலாசாரம் பின்பற்றும் மக்கள் குழுக்குளை உள்ளடக்கிய பன்மை கலாசார நாடாக திகழ்கிறது. இதில் ஒவ்வொரு மக்களின் தேவை என்ன என்பதையும், அவர்களின் உரிமைகளை உறுதிபடுத்தல், பாதுகாத்தல் என்ற அடிப்படையிலும் ஒவ்வொரு பிரதேசங்களில் இருந்தும் ஒவ்வொரு சமூகத்தினரை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுகின்றனர். இவர்களை ஒழுங்குபடுத்தும் களமாக இப் பாராளுமன்றம் திகழ்வது முக்கியம் வகிபங்காகும். இதனூடாக ஒவ்வொரு சமூக குழுவினரதும் விருப்பு வெறுப்புகள் முன்வைக்கப்பட்டு, கலந்துரையாடப்பட்டு அவர்களின் விருப்பு வெறுப்பு பிரதிநிதித்துவம் செய்யும் அடிப்படையில் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் சிறுபாண்மை முதல் பெரும்பாண்மை வரை ஒவ்வொருவரும் சட்டத்தின் முன் சமன் என்று மதிக்கப்படுகின்றனர். இதன் மூலம் ஜனநாயகம் மேலும் உறுதிப்படுத்தப்படுகின்றது. இதற்கு பாராளுமன்றின் பங்கு முக்கிய இடம் பெறுகிறது.

இவ்வாறு சட்டங்களை உருவாக்குதல் முதல் அரசாங்கத்தை கண்காணிப்பது வரை பொறுப்புகளை ஏற்று செயல்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து அரசியல் மாற்றங்கள் மற்றும் சவால்கள் மத்தியில் மக்களாட்சியை உறுதியானதாக்க முயன்று வருகின்றது.

எனவே எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தலின் ஊடாக மக்களால் தெரிவுசெய்யப்படவுள்ள மக்கள் பிரதிநிதிகள் ஊடாக பாராளுமன்றம் சமூக நீதி, பொறுப்பாற்றல், மற்றும் நாட்டின் எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றிக்கு முதன்மை கொடுத்து இலங்கையின் அரசியல் அமைப்பை முன்னோக்கி கொண்டு செல்லும் என எதிர்பார்க்கபடுகிறது. மற்றும் நாட்டு மக்களின் நம்பிக்கை மீண்டும் நிலைநிறுத்தி நாட்டின் வளர்ச்சியின் புதிய பாதைக்கு ஒரு புது திருப்பு முனையாக அமையும் என்றும் நம்பப்படுகிறது.
“ மக்களின் விருப்பமே சட்டமாக
நாட்டின் நலனே நம் கனவாக
பாராளுமன்றம் நிமிர்ந்து நிற்க
நம் வாக்கு விளைவாக மாற”

Penned by : Rtr. Thilaksika Uthayakumar

Leave a comment